பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கந்த சஷ்டியை முன்னிட்டு பழனி அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதை காண பழனி சுற்றுவட்டாரம் மட்டுமல்லாது வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இதனால் அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி, அய்யம்புள்ளி ரோடு உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதோடு நெரிசலும் மிகுந்து காணப்படும்.
இந்தநிலையில் சூரசம்ஹாரம் நடைபெறும் கிரிவீதிகளில் சாலையோர கடைகளின் முன்பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. கோவில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையிலான பணியாளர்கள் கிரிவீதிகளில் ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்களை லாரியில் ஏற்றினர். இதற்கிடையே ஒரு சில கடைக்காரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர்.
இதற்கிடையே பழனி கிரிவீதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுவதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 முதல் கிரிவீதிகளில் வாகனங்கள் செல்லவும், வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் கொடைக்கானல் சாலையில் இருந்து சுற்றுலா பஸ்நிலையத்துக்கு வாகனங்கள் வந்து செல்லலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பழனி சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களை தடுக்க சாதாரண உடைகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர் என்று பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி தெரிவித்தார்.