ஆலங்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆலங்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
ஆலங்குடி அருகே குருந்தடிமனை கிராமத்தில் உள்ள சாலை ஓரத்தில் இருந்த வரத்துவாரி புறம்போக்கு இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து குப்பைகளை கொட்டி வைத்திருந்தார். மேலும் அந்த பகுதியினர் அரசு இடத்தின் வழியாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையையும் ஆக்கிரமித்திருப்பதாக ஆலங்குடி தாசில்தாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சம்பவ இடத்திற்கு சென்ற தாசில்தார் செந்தில்நாயகி, வெண்ணவால்குடி வருவாய் ஆய்வாளர் குப்புசாமி, கிராம நிர்வாக அலுவலர் கணேசன், உதவியாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் குப்பையை அகற்றிவிடுமாறு தனிநபரை எச்சரித்து விட்டு வந்தனர். ஆனால், அந்த தனிநபர் ஆக்கிரமிப்பில் இருக்கும் குப்பைகளை அகற்ற முன்வராததால், நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் ஆலங்குடி போலீசாரின் பாதுகாப்போடு பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு இடத்தில் இருந்த குப்பைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.