சமயபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சமயபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

சமயபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

திருச்சி

சமயபுரம், ஜூலை.2-

சமயபுரம் மாரியம்மன் கோவில் கிழக்கு பகுதியில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுர கும்பாபிஷேக விழா வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி கோவிலை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகள், சன்னதிவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று ச. கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ள பழக்கடைகள், டீக்கடைகள், ஜூஸ் கடைகள் முன்பு ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த ஆஸ்பெஸ்டாஸ் சீட், தகரம் ஆகியவை அகற்றப்பட்டன. தொடர்ந்து தெற்கு பிரகாரத்தில் உள்ள கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதேபோல் சன்னதி வீதியில் இருபுறங்களிலும் உள்ள மாரியம்மன் பட விற்பனை கடைகள், பிரசாத கடைகள், பொம்மை கடைகள் பூக்கடைகள் உள்ளிட்ட கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை கடை உரிமையாளர்களே அகற்றிக்கொண்டனர். இந்நிலையில் சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்ட போலீசார் கும்பாபிஷேக விழாவிற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுங்கள், நீங்கள் அகற்றவில்லை என்றால் நாங்களே எடுத்து விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் ஆக்கிரமிப்புகளை தாமாகவே முன்வந்து அகற்றினர்.


Next Story