ஜவகர் பஜாரில் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஜவகர் பஜாரில் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

கரூர் ஜவகர் பஜாரில் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கரூர்

ஆலோசனை கூட்டம்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கரூர் ஜவகர்பஜார், கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளின் முன்பு நடைபாதையில் ஏராளமான விளம்பர பதாகைகள், தோரணங்கள், பந்தல் அலங்கார வளைவுகள் ஆகியவை வைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் சாலையோரங்களில் நிறுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருவதாக புகார் வந்தது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோரின் உத்தரவின் பேரில் நேற்று கரூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலையில் இருந்து ஜவகர் பஜார் வரை உள்ள சாலையின் இருபுறத்திலும் உள்ள கடைகளின் வெளிப்பகுதியில் நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட விளம்பர பதாகைகள், தோரணங்கள், பந்தல் அலங்கார வளைவுகள் ஆகியவற்றை அகற்றினர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருப்பதாக டவுன் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதேபோல் கோவைரோடு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் இதேபோன்று போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து விளம்பர பதாகைகள் வைத்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story