வேலூர் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது 110 வாகனங்களுக்கு ரூ.66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது 110 வாகனங்களுக்கு ரூ.66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
வேலூர் மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஆற்காடு சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே சென்றது. குறிப்பாக அந்த சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அருகே உள்ள பகுதிகளில் நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகளின் ஆக்கிரமிப்பு காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லமுடியாத நிலை காணப்பட்டது. மேலும் டீக்கடை, ஓட்டல்கள், மருந்துக்கடை, பெட்டிக்கடைக்கு வரும் நபர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக போக்குவரத்து விதியை மீறி நிறுத்தி சென்றனர்.
இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியிருந்த 120 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். ஆனால் சில மணிநேரத்தில் மீண்டும் அந்த இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த புகாரின்பேரில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேலூர்-ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ரஜினிகாந்த், கருணாகரன், நாகராஜன் மற்றும் போலீசார், மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து நேற்று காலை ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்..
கடையின் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள், சமையல் அடுப்புகள், மாவு பிசைய பயன்படுத்தும் மேசைகள் உள்ளிட்டவைகளை அதிரடியாக அகற்றினர். பின்னர் அவை மாநகராட்சி வாகனம் மூலம் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ என 110 வாகனங்களுக்கு ரூ.66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டன. போலீசார் ஆக்கிரமிப்பை அகற்றுவதை அறிந்த சில கடைக்காரர்கள் தாங்களாகவே கடையின் பொருட்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.