874 ஹெக்டர் பரப்பளவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 874 ஹெக்டர் பரப்பளவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஒருங்கிணைந்த பண்ணை பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 874 ஹெக்டர் பரப்பளவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஒருங்கிணைந்த பண்ணை பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 1424.77 ஹெக்டர் பரப்பளவு தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது அதிகாரிகள் நடத்திய கள ஆய்வில் கண்டறியப்பட்டது.
அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, இந்து சமய அறநிலை துறை, போலீசார் உள்ளிட்ட அரசு துறைகளை ஒருங்கிணைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை 122.54 ஹெக்டர் பரப்பளவிலான நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம் 268.65 ஹெக்டர், ஏப்ரல் மாதம் 200.57 ஹெக்டர், மே மாதம் 151.46 ஹெக்டர் மற்றும் கடந்த மாதம் 131.01 ஹெக்டர் என இதுவரை மொத்தம் 874.25 ஹெக்டர் பரப்பளவு அரசுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பண்ணை பூங்காக்கள்
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர் தூர்வாருதல், கரைகள் பலப்படுத்துதல், நீர் தேங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்தல், காவல்துறை மூலமாக நடவடிக்கை போன்றவற்றை மேற்கொண்டு மீண்டும் புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் அரசு துறைகள் இணைந்து ஒருங்கிணைந்த பண்ணை பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் எவரும் நீர்நிலைகள், அரசுக்கு சொந்தமான இதர இடங்களில் ஆக்கிரமிப்புகள் எதுவும் செய்திருந்தால் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் சென்னை ஐகோர்ட்டு ஆணையின்படி ஆக்கிரமிப்புகள் அனைத்தும் விரைவில் அகற்றப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.