சாலையில் விழுந்த பாறைகள் அகற்றம்


சாலையில் விழுந்த பாறைகள் அகற்றம்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி-கூக்கல்தொரை சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன. தொடர்ந்து பாறைகள் அகற்றப்பட்டு, வாகன போக்குவரத்து தொடங்கியது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி-கூக்கல்தொரை சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன. தொடர்ந்து பாறைகள் அகற்றப்பட்டு, வாகன போக்குவரத்து தொடங்கியது.

நிலச்சரிவு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கூக்கல்தொரை செல்லும் சாலை ஊட்டி மற்றும் ஏராளமான குக்கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சீக்கூர்மட்டம் பகுதியில் சாலையின் பக்கவாட்டில் 100 அடி உயரத்தில் உள்ள செங்குத்தான பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மண் மற்றும் ராட்சத பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன.

மேலும் சாலையோரத்தில் உள்ள தடுப்புகளை உடைத்து, பள்ளத்தில் இருந்த விளைநிலத்திலும் பாறைகள் விழுந்தன. நிலச்சரிவு காரணமாக சாலையை மண், பாறைகள் மூடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நாரகிரி வழியாகவும், வெஸ்ட்புரூக், கக்குச்சி வழியாகவும் மாற்றுப்பாதைகளில் இயக்கப்பட்டன. இந்தநிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் சென்று ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

போக்குவரத்து தொடங்கியது

இதையடுத்து கோத்தகிரி உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் 2 பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத பாறைகளை உடைக்கும் பணியிலும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இரவு 8.30 மணிக்கு சாலையில் இருந்த மண், பாறைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டது.அதன் பின்னர் கோத்தகிரி-கூக்கல்தொலை சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. நேற்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் அரசு பஸ், சரக்கு வாகனங்கள் வழக்கம்போல் சென்று வந்தன. இதன் மூலம் போக்குவரத்து சீரானது. மேலும் பாறைகள் சரிந்து விழுந்ததால் சேதமடைந்த சாலையோர தடுப்புச்சுவர் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புச்சுவர்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story