திருப்பூர் ரெயில் நிலையத்தில் இந்தி பெயர் பலகை அகற்றம்


திருப்பூர் ரெயில் நிலையத்தில் இந்தி பெயர் பலகை அகற்றம்
x

திருப்பூர் ரெயில் நிலையத்தில் தமிழை மறைத்து இந்தியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் ரெயில் நிலையத்தில் தமிழ் மொழியில் தகவல் மையம் என பெயர் பலகை எழுதப்பட்டிருந்தது. அதுபோல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அந்தப்பெயர் மொழி பெயர்க்கப்பட்டு ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் திடீரென தகவல் மையத்தின் தமிழ் எழுத்துக்களை மறைத்து அதன் மேல் இந்தி எழுத்தால் 'சகயோக்' என எழுதப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்திலும், தமிழிலும் 'சகயோக்' என அறிவிப்பு பலகையில் வாசகம் இடம் பெற்று இருந்தன.

இந்தியில் பெயர்பலகை

ஆங்கிலத்தில் 'இன்பர்மேஷன் சென்டர்' என்றும், தமிழில் தகவல் மையம் என்றும் எழுதியிருக்க வேண்டும். ஆனால் இந்தி வார்த்தையை ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிட்டு வைத்திருந்தனர். இதனை இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே அறிய முடியும்.

அதுபோல் இந்த சேவை மையத்தின் அருகில் 'காசி தமிழ் சங்கமம்' என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் அனைத்தும் இந்தி மொழியில் பெரிதாக எழுதப்பட்டு ஒரே ஒரு வாசகம் மட்டும் தமிழ் எழுத்தில் சிறிதாக இடம் பெற்றிருந்தது. இதனைப்பார்த்த தமிழக பயணிகள் தமிழ் மறைப்பா அல்லது இந்தி திணிப்பா என்று தெரியாமல் குழம்பினார்கள். இதுகுறித்து படத்துடன் செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 28-ந்தேதி வெளியானது.

இந்த செய்தி சமூக வலைதளங்களிலும் நேற்று வேகமாக பரவியது. இந்தி வாசகம் இடம் பெற்றதற்கு பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்தார்கள். இந்தியை நேரடியாக திணிப்பதாக குற்றம் சாட்டி கருத்துகளை பதிவிட்டனர். கண்டனங்களையும் தெரிவித்தார்கள்.

இந்தி பெயர் பலகை அகற்றம்

இதனைத்தொடர்ந்து நேற்று ரெயில்வே ஊழியர்கள், ரெயில் நிலையத்தில் தகவல் மையத்தின் முன்பு 'சகயோக்' என்று வாசகம் இடம்பெற்று இருந்த பெயர் பலகையை அதிரடியாக கிழித்து அகற்றினார்கள். அதன் பின்னர் தமிழில் எழுதப்பட்டிருந்த சேவை மையம் என்ற பெயர் தெளிவாக தெரிந்தது.

அதுமட்டுமின்றி அதன் அருகில் 'காசி தமிழ் சங்கமம்' குறித்து இந்தி மொழியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பதாகை அகற்றப்பட்டு அங்கு தமிழ் வாசகத்திலான விளம்பர பதாகை தற்போது வைக்கப்பட்டுள்ளது.


Next Story