ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு ஜெயலலிதா சிலை அகற்றம்


ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு ஜெயலலிதா சிலை அகற்றம்
x

ரிஷிவந்தியம் அருகே அனுமதியின்றி வைத்த ஜெயலலிதா சிலை அகற்றப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தால் கருணாநிதி சிலையும் அப்புறப்படுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் தொழுவந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 2010-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அத்தியூர் அண்ணாநகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தி.மு.க.வினர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழுவந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் மேடை அமைத்து அதில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிலையை அ.தி.மு.க.வினர் வைத்தனர். ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா சிலைகளை வைக்க அந்தந்த கட்சியினர் அனுமதி பெறவில்லை என தெரிகிறது.

இதை அறிந்த வருவாய்த்துறையினர், சிலைகளை அப்புறப்படுத்துமாறு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினரிடம் வலியுறுத்தினர். இருப்பினும் அவர்கள் சிலைகளை அகற்றவில்லை.

இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை வருவாய்த்துறையினர் துணியால் மறைத்து 'சீல்' வைத்தனர்.

ஜெயலலிதா சிலை அகற்றம்

பின்னர் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்றுவதற்காக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், அரியலூர் வருவாய் அலுவலர் இளையராஜா, கிராம நிர்வாக அலுவலர்கள் தீபா, ஆனந்த், ராஜா, திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர்கள் திருக்கோவிலூர் பாபு, சங்கராபுரம் பாலகிருஷ்ணன், பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார், அதிகாரிகள் தொழுவந்தாங்கல் கிராமத்துக்கு சென்றனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம், அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலையை அவர்கள் அகற்றினர்.

அ.தி.மு.க.வினர் போராட்டம்

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகி ராஜசேகர், ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர்கள் கதிர்.தண்டபாணி, அருணகிரி மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்து ஜெயலலிதா சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், ஜெயலலிதா சிலையை அகற்றியதுபோல், அனுமதியின்றி வைக்கப்பட்ட கருணாநிதி சிலையையும் அகற்றக்கோரி தொழுவந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வை வருவாய்த்துறை மற்றும் போலீசார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கருணாநிதி சிலையை எடுக்க வலியுறுத்தினர்.

போலீஸ் குவிப்பு

இதையடுத்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஒன்றிய நிர்வாகிகள் துரைமுருகன், அண்ணாதுரை, கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் வருவாய்த்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை அப்புறப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story