நெல்லை டவுன் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நெல்லை டவுன் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
நெல்லை மாநகராட்சி பகுதியில் சாலையோரம் உள்ள கடைகள், வீடுகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். இதையடுத்து நெல்லை மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் அருகில் உள்ள ரதவீதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. தேரோட்டத்திற்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின்பேரில், உதவி ஆணையாளர் பைஜூ தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அங்குள்ள விளம்பர பலகைகள், தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்தினார்கள். இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.