நகராட்சி தினசரி சந்தையில் பழைய கடைகள் அகற்றம்
கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் பழைய கடைகள் அகற்றும் பணி திங்கட்கிழமை தொடங்கியது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நகராட்சி தினசரி சந்தையில் பழைய கடைகளை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 14 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.
சந்தையில் ரூ.6.84 கோடியில் திட்டம்
கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் நகராட்சி பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இயங்கி வருகிறது. மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி கடைகள். பழக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்தன. எந்நேரமும் பரபரப்புடன் காணப்பட்டு வந்த இந்த மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தது. நகராட்சி பட்டியலை விட கடைகள் எண்ணிகை அதிகரித்தது. மேலும் நடைபாதை கடைகளும் அதிகரித்து வந்தது. இதனால் தினசரி சந்தைக்குள் கடும் நெருக்கடி நிலவியது. கடைகளின் கட்டிடங்களும் பழுதடைந்து காணப்பட்டன.
இதை தொடர்ந்து, 3 மாதங்களுக்கு முன்பு தினசரி சந்தையில் கடை கட்டிடங்களை இடித்து விட்டு ரூ 6.84 கோடி மதிப்பீட்டில் 250 புதிய கடைகள் கொண்ட தினசரி சந்தை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
கடைகளை அகற்ற எதிர்ப்பு
இதை தொடர்ந்து சந்தை கடைகளை காலி செய்து விட்டு கூடுதல் பஸ் நிலையத்தில் தற்காலிக சந்தைக்கான கடைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் சந்தை வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்து விட்டனர். அங்கு பாதுகாப்பு இல்லை என்றும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி தொடர்ந்து இங்கேயே கடைகளை நடத்தி வந்தனர். நகராட்சி நிர்வாகம் விடுத்த கெடுவை புறக்கணித்து வியாபாரிகள் தொடர்ந்து கடைகள் நடத்தி வந்ததுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர். வியாபாரிகள் தரப்பில் நீதிமன்றம் சென்றனர். கடைகளை இடிப்பதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் கடந்த 14-ந் தேதி வரை கடைகளை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் கால அவகாசம் கொடுத்தது. ஆனாலும், வியாபாரிகள் கடைகள் காலி செய்யவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தினசரி சந்தை கடைகளை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதை தொடர்ந்து சில கடைக்காரர்கள் தாங்களாகவே கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடையிலிருந்த பொருட்களை வாகனங்களில் ஏற்றி சென்ற வண்ணம் இருந்தனர்.
வியாபாரிகள் கைது
அதேசமயம் சில வியாபாரிகள் கடைகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கோஷம் எழுப்பியவாறு நேற்று அதிகாலையில் சந்தையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை 3 மணி முதல் கடைகளில் வியாபாரமும் நடந்தது. இந்தநிலையில் நேற்று காலை 5.30 மணி அளவில் 3 பொக்லைன் எந்திரங்களுடன் நகராட்சி அதிகாரிகள் சந்தைக்குள் வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள் பொக்லைன் எந்திரம் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து எஸ்.ஆர்.பாஸ்கரன், செல்லத்துரை உள்பட 14 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.
கடைகளை அகற்றும் பணி
பின்னர் நகராட்சி ஆணையர் ராஜாராம், தாசில்தார் சுசீலா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் கடைகளை அகற்றும் பணி தொடங்கியது. இந்தப் பணியில் நகராட்சி, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சந்தையில் கடைகள் இடிக்கும் பணி நடைபெற்று வருவதால் மார்க்கெட் ரோடு, கிருஷ்ணன் கோவில் தெரு, பூக்கடை தெரு, மெயின் ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.