கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்
சாலை அமைக்க இடையூறாக இருந்த கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் தற்போது பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்கள் போல் இல்லாமல் சாலை அமைக்க இடையூறாக உள்ள பகுதிகளை அகற்றி விட்டு தரமான சாலைகளை அமைக்க மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அனைத்து பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 28-வது வார்டு பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது அந்த பகுதியில் இருந்த கட்சி கொடி கம்பங்கள் சாலை அமைக்க இடையூறாக இருந்தது. இதை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த கொடிகம்பங்கள் நேற்று காலை அகற்றப்பட்டது. அப்போது வார்டு கவுன்சிலர் வெயில்ராஜ், மாநகராட்சி அதிகாரி முத்துராஜ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.