நாகர்கோவில் வடசேரி சந்தையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம் ;வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


நாகர்கோவில் வடசேரி சந்தையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம் ;வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
x

நாகர்கோவில் வடசேரி சந்தையில் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி சந்தையில் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கனகமூலம் சந்தை

நாகர்கோவில் வடசேரியில் உள்ள கனகமூலம் சந்தையில் 260 கடைகள் உள்ளன. அவற்றில் 140 கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள கடைகள் அனைத்தும் ஏலம் எடுக்கப்படாமல் பூட்டப்பட்டு கிடக்கிறது.

இந்தநிலையில் கனகமூலம் சந்தையில் கடைகளுக்கு முன் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்கள் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதிலும் சந்தையின் தெற்கு புறத்தில் நடைபாதையில் வியாபாரிகள் மேல்கூரை அமைத்து பொருட்களை வெளியே வைத்திருந்தனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. எனவே வியாபாரிகள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களை கடைக்குள் வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு நோட்டீசும் வழங்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

ஆனாலும் பல்வேறு கடைக்காரர்கள் அதை கடைப்பிடிக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் ஞானப்பா, சுப்பையா, சேகர், ஆல்ட்ரின் மற்றும் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை கனகமூலம் சந்தைக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது நடைபாதையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்களை கடைக்குள் வைக்கும்படி கூறினர். ஆனால் வியாபாரிகள் யாரும் பொருட்களை அப்புறப்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து டெம்போ வரவழைக்கப்பட்டு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த காய்கறிகள் மற்றும் பொருட்களை அகற்றி டெம்போவில் ஏற்றினர்.

வியாபாரிகள் எதிர்ப்பு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் உடனே ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்களை கடைக்குள் எடுத்து வைத்தனர். அதே சமயம் ஒரு சில வியாபாரிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த வியாபாரிகள் கூறுகையில், 'நாங்கள் கொரோனா காலத்தில் வியாபாரம் செய்ய முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டோம். தற்போது உள்ள சூழ்நிலையில் பொருட்களை கடைகளுக்கு முன் நடைபாதையில் வைத்தால் தான் வியாபாரம் ஆகிறது. குறிப்பாக இந்த விற்பனை மூலம் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படவில்லை. சந்தையில் காலியாக உள்ள கடைகளை ஏலம் விடுவதற்காக இதுபோன்ற நெருக்கடியை அதிகாரிகள் செய்கிறார்கள். எனவே பொருட்களை நடைபாதையில் வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்' என்றனர்.

பரபரப்பு

ஆனால் வியாபாரிகளின் கோரிக்கைக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் நடந்தது. இதை தொடர்ந்து வியாபாரிகளிடம் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினா்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து பொருட்களை கடைக்குள் வைத்து வியாபாரம் செய்ய தொடங்கினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story