தாராசுரம் ரெயில் நிலையத்தில் செடி-கொடிகள் அகற்றம்


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் தாராசுரம் ரெயில் நிலையத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் தாராசுரம் ரெயில் நிலையத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டது.

ரெயில் நிலையம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதி உள்ளது. இந்த பகுதி வழியாக ராமேஸ்வரம், நாகர்கோவில், நெல்லை, சேலம் சென்னை, திருச்சி, செங்கோட்டை, கோவை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பயணிகள் ரெயில்கள், விரைவு மற்றும் அதிவிரைவு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.அதே போல் சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

தாராசுரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் பயணிகள் ரெயில் மூலம் காலை முதல் இரவு வரை பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் பயன் அடைந்தனர். அதே போல் தாராசுரம் பகுதியில் விளையும் விளைபொருட்களை பெருநகரங்களில் உள்ள சந்தைக்கு கொண்டு செல்வதற்கும் பயணிகள் ரெயிலை பயன்படுத்தி வந்தனர்.

செடி-கொடிகள் அகற்றப்பட்டது

இந்த நிலையில் இந்த ரெயில் நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை உரிய பராமரிப்பின்றி காணப்பட்டது. ரெயில் நிலையத்தில் உள்ள கழிவறை சரியான முறையில் பராமரிக்கப்படாததால் கழிவறையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சி அளித்தது. இதன்காரணமாக அங்கு சுற்றித் திரியும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் படையெடுக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் டிக்கெட் கவுண்ட்டர் அருகில் உள்ள கட்டிடத்தையும் சுற்றியும் செடிகள் வளர்ந்து காணப்பட்டது.

குறிப்பாக மழைக்காலங்களில் பூச்சிகள் தொல்லை அதிக அளவில் காணப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக ரெயில்வே துறையினர் தாராசுரம் ரெயில் நிலையம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். கழிவறை அருகே மற்றும் கட்டடித்தின் அருகே இருந்த செடி,கொடிகள் அகற்றப்பட்டது. இதன் காரணமாக அந்த இடமே தூய்மையாக காட்சி அளித்தது.

இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி மக்களும், பயணிகளும் நன்றி தெரிவித்தனர்.


Next Story