ஆவின் துணை மேலாளர் பணியிடை நீக்கம்
தயிரை விற்பனைக்கு அனுப்பாததால் ஆவின் துணை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் நிறுவனம் அமைந்துள்ளது. விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யப்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு பால், தயிர், மோர் உள்பட பால் பொருட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதில் தயிர் மட்டும் சுமார் 5 ஆயிரம் லிட்டர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வேலூர் ஆவினில் உற்பத்தி செய்யப்பட்ட தயிர் பாக்கெட்டுகள் 3 மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படவில்லை.
தயிர் வேண்டி ஆவின் முகவர்கள் பலர் பணம் செலுத்தி ஆர்டர் கொடுத்திருந்தனர். ஆனால் தயிர் வினியோகிக்கப்படாததால் முகவர்கள் சார்பில் பல்வேறு புகார்கள் ஆவின் பொதுமேலாளர் ரவிக்குமாருக்கு சென்றது. முகவர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் சார்பிலும் புகார்கள் சென்றதாக தெரிகிறது. சுமார் 900 லிட்டர் தயிர் தேக்கமானது. பொதுமக்களும் இதனால் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் முறையாக தயிரை விற்பனைக்கு அனுப்பாததால் துணை மேலாளர் உமாமகேஸ்வரராவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.