பாம்பன் ரெயில் தண்டவாள பாதைகள் அகற்றம்


பாம்பன் ரெயில் தண்டவாள பாதைகள் அகற்றம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரெயில் தண்டவாள பாதைகள் அகற்றப்பட்டன.

ராமநாதபுரம்

பாம்பன்,

ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. 100 ஆண்டுகளை கடந்த பாம்பன் ரெயில் பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள வடக்கு கடல் பகுதியில் ரூ.450 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. 70 சதவீதத்திற்கும் மேல் பணிகள் முடிவடைந்து விட்டது. இதனிடையே மண்டபம் கடற்கரை பூங்கா எதிரில் உள்ள பாம்பன் ரெயில் பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து மண்டபம் ரெயில்வே நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்த ரெயில்வே தண்டவாள பாதையானது அகற்றப்பட்டுவிட்டன. அதன் அருகிலேயே புதிய ரெயில் தண்டவாள பாதை அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 2-வது கட்டமாக பாம்பன் பகுதியில் ரெயில் பாலத்தின் நுழைவுபகுதியில் இருந்து பாம்பன் ரெயில்வே நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் 105 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த ரெயில்வே தண்டவாளப்பாதை முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. தண்டவாள கம்பிகள், சிலிப்பர் கற்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன.

புதிய தண்டவாளப்பாதை அமைக்கப்பட உள்ளதால் ரெயில்கள் செல்லும்போது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள் யாரும் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதை தடுப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பாம்பன் பகுதியில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் இருந்து ரெயில் பாலத்தை நுழைவு பகுதி வரையிலும் தடுப்பு சுவர் கட்டும்பணியும் நடைபெற்று வருகின்றது. சுமார் 105 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த பாம்பனில் ரெயில்வே தண்டவாள கம்பிகள் சிலிப்பர் கற்கள் அகற்றப்படுவதை பாம்பன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மீனவர்களும் மற்றும் ரோடு பாலத்தில் நின்றபடி சுற்றுலா பயணிகளும் பார்த்து செல்கின்றனர்.


Next Story