கொரோனா கால செலவுகளை முன்னிட்டு அரசு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்


கொரோனா கால செலவுகளை முன்னிட்டு அரசு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்
x

இதுகுறித்து நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட செலவுகளை முன்னிட்டு, அரசுக்கு ஏற்படும் மற்ற பல்வேறு செலவீனங்களை குறைக்கும் வகையில், தமிழக அரசு கடந்த 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளில் தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுகளை பின்பற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி வாரியங்கள் ஆகியவை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

தற்போது தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக நிதிச் சூழ்நிலையில் சிக்கல் தொடர்வதாலும், ஜி.எஸ்.டி. இழப்பீட்டை பெறுவதில் நிலையற்ற தன்மை இருப்பதாலும், நிர்வாக காரணங்களுக்காகவும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய அரசு முடிவு செய்தது.அந்த வகையில் பொருளாதார காரணங்களுக்காக முந்தைய உத்தரவில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து அரசு உத்தரவிடுகிறது. சில அம்சங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை.

தடை நீக்கம்

அதன்படி, புதிய அரசு அலுவலகங்களை உருவாக்குவது, ஏற்கனவே இருக்கும் உள்கட்டமைப்புகளை பராமரிப்பது ஆகியவற்றில் செலவீனங்களை கட்டுப்படுத்தி பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவு தொடர்கிறது.அரசு நிகழ்வுகளில் அரசு அதிகாரிகளுக்கான மதிய உணவு, இரவு உணவு, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான செலவுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.

ஆம்புலன்ஸ், போலீஸ், தீயணைப்பு ஆகியவற்றுக்கான வாகனங்களை வாங்குவது தவிர மற்ற புதிய வாகனங்களை வாங்க விதிக்கப்பட்ட தடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய வாகனங்களை வாங்குவதற்கான தடை நீடித்தாலும், பழைய பழுதடைந்த வாகனங்களை மாற்றிக் கொள்வதற்காக மட்டும் புதிய வாகனங்களை வாங்கலாம்.

அடிப்படை பயிற்சி, கொரோனா தொடர்பான பயிற்சி தவிர மற்ற அனைத்து பயிற்சிகளும் தடை செய்யப்படுகின்றன என்ற உத்தரவு நீக்கப்படுகிறது. பழைய கம்ப்யூட்டர்களை மாற்றுவதற்கு மட்டுமே புதிய கம்யூட்டர்களை வாங்க வேண்டும், மற்றபடி புதிய கம்ப்யூட்டர்கள் வாங்கக் கூடாது என்ற தடை உத்தரவு நீக்கப்படுகிறது.

தொடரும் தடை

அரசின் தேவைகளுக்கு மட்டுமே அதிகாரிகள் பயணிக்கலாம் என்றும் ஆய்வுக் கூட்டங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட இடத்தில் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடரும். மாநிலத்தை விட்டு வெளியே செல்ல விமானப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்ற உத்தரவும் தொடர்கிறது. பணியிட மாற்றத்தினால் ஏற்படும் பயணச் செலவை குறைப்பதற்காக பொதுவான பணியிட மாற்றங்களை நிறுத்தி வைத்த உத்தரவின் நிலை தொடரும்.

பரிசுப் பொருட்கள், பூங்கொத்துகள், சால்வைகள், நினைவுப் பரிசுகள், மாலைகளை அரசு செலவில் இருந்து மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. 20 பேருக்கு மேல் பங்கேற்கும் மாநாடுகள், கருத்தரங்குகள், கலாசார நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்படுகிறது. என்றாலும், அவற்றை ஆன்லைன் மூலமாக நடத்துவதே சிறந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story