சாலையோர மரங்கள் அகற்றம்


சாலையோர மரங்கள் அகற்றம்
x

விழுப்புரத்தில் வடிகால் வாய்க்கால் பணிக்காக சாலையோர மரங்கள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம் நகரில் மழைக்காலத்தின்போது முக்கிய சாலைகளிலும், குடியிருப்புகளிலும் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் வடிகால் வாய்க்கால் வசதிகள் இல்லாததாலும், ஏற்கனவே இருந்த சில வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாலும், இன்னும் சில வாய்க்கால்கள் தூர்ந்து போயிருப்பதாலும் சாதாரண மழைக்கே நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்குகிறது. இதனை தவிர்க்கும் வகையில் விழுப்புரம் நகரில் சாலையோரங்களின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே வடிகால் வாய்க்கால் பணிகள் முடிவுற்ற நிலையில் புதிய பஸ் நிலையம் அருகில் தற்போது வடிகால் வாய்க்கால் பணிகள் நடந்து வருகிறது. மேலும் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக 16 மரங்கள், வெட்டப்பட்டு வருகிறது. இதில்பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, புதிய பஸ் நிலையம் அருகே தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் இன்னும் 15 நாட்களில் நிறைவுபெறும். ஒரு பக்கம் நிறைவு பெற்றவுடன் சாலையின் மறுபக்கம் இப்பணி தொடங்கும். அங்கிருந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கும். இந்த வாய்க்கால் கோலியனூரான் வாய்க்காலுடன் இணைக்கப்படும். இப்பணிகளுக்காக ரூ 4.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் வடிகால் வாய்க்கால் பணிக்காக 16 மரங்கள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் வெட்டப்படுகிறது. அதே நேரத்தில் இதுவரை விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் சுமார் 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றனர்.




Next Story