திருப்புவனத்தில் சாலைகளில் அமைத்த கடைகள் அகற்றம் - போலீசார், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை
திருப்புவனத்தில் சாலைகளில் அமைத்த கடைகள் அகற்றப்பட்டு போலீசார், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தனர்
திருப்புவனம்,
திருப்புவனத்தில் ஒவ்வொரு செவ்வாய், புதன்கிழமைகளில் வாரச்சந்தைகள் நடைபெறும். திருப்புவனத்தில் உள்ள அருப்புக்கோட்டை குடிநீரேற்றும் வளாகம் அருகே இடம் ஒதுக்கப்பட்டு சந்தை நடைபெற்று வருகிறது. வாரச்சந்தையின் போது பெரிய வியாபாரிகள் மதுரையில் இருந்து காய்கறி, பழங்கள் மொத்தமாக வாங்கி வந்து சந்தை வளாகத்திற்குள் வைத்து விற்பனை செய்வார்கள். சிறிய வியாபாரிகள் மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலை, திருப்புவனம்-தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஆகிய சாலைகளின் இருபுறத்திலும் கடைகள் போட்டு விற்பனை செய்தனர்.
இதேபோல் கிராம பகுதிகளில் தங்களது சொந்த தோட்டங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து சிலர் சாலையின் ஓரத்தில் போட்டு வியாபாரம் செய்தனர்.. இதனால் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை என்பதால் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரகாஷ் தலைமையில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், திருப்புவனம் பேரூராட்சி செயல்அலுவலர் ஜெயராஜ் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் அங்கு சென்று சாலைகளில் போடப்பட்டிருந்த கடைகளை அகற்றி சந்தை வளாகத்திற்குள் வைத்து விற்பனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இதனால் நேற்று மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலை, திருப்புவனம்-தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஆகிய இரு சாலைகளும் போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்பட்டன.