பொக்லைன் எந்திரம் மூலம் தேயிலை செடிகள் அகற்றம்


பொக்லைன் எந்திரம் மூலம் தேயிலை செடிகள் அகற்றம்
x
தினத்தந்தி 23 Dec 2022 12:30 AM IST (Updated: 23 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேயிலை தோட்டத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து பொக்லைன் வாகனம் மூலம் தேயிலைச் செடிகளை அகற்றியதாக முன்னாள் அமைச்சர் மீது விவசாயி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நீலகிரி

ஊட்டி

தேயிலை தோட்டத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து பொக்லைன் வாகனம் மூலம் தேயிலைச் செடிகளை அகற்றியதாக முன்னாள் அமைச்சர் மீது விவசாயி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மீது புகார் மனு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த மணிக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜு (வயது 71). இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் படித்து முடித்து வெளியூர்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

ராஜு என்.சி.எம்.எஸ். அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி, ஓய்வு பெற்றபின் தற்போது விவசாயம் மேற்கொண்டு வருகிறார். ராஜீவுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் மணிக்கல் மட்டம் பகுதியில் அடுத்தடுத்து தேயிலை தோட்டம் உள்ளது.

தேயிலை செடிகள் அகற்றம்

இந்த நிலையில் ராஜுவின் உறவினர்களிடம் அந்தப் பகுதியில் உள்ள இடத்தை முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் விலைக்கு வாங்கினார். மேலும் தேயிலை தொழிற்சாலை அமைப்பதற்காக ராஜுவிடம் இடத்தை கேட்டுள்ளார். ஆனால் ராஜு இடம் கொடுக்க சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் இடத்தை தருமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொக்லைன் வாகனம் மூலம் முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் தான் விலைக்கு வாங்கிய இடம் மற்றும் ராஜுவின் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள தேயிலைச் செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியதாக தெரிகிறது.

போலீஸ் நிலையத்தில் புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜு இதுகுறித்து மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கண்மணி, சப்- இன்ஸ்பெக்டர் தனபால் தலைமையான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பொக்லைன் வாகனம் மூலம் தேயிலை செடிகள் அகற்றப்பட்ட விவகாரம் தெரிந்து ஊர் மக்கள் அங்கு கூடியதால் பொக்லைன் வாகனத்தை இயக்கியவர்கள் வாகனத்தை தோட்டத்தில் விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.



Next Story