ரெயில்வே மேம்பாலத்துக்கு இடையூறாக இருந்த வீடு அகற்றம்
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில், ரெயில்வே மேம்பால பணிக்கு இடையூறாக இருந்த வீடு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெயில்வே மேம்பாலம்
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் திண்டுக்கல்-பழனி, திண்டுக்கல்-கரூர் திண்டுக்கல்-திருச்சி என அடுத்தடுத்து 3 ரயில்வே தண்டவாளங்கள் உள்ளன. திண்டுக்கல்லுக்கு ரெயில்கள் வந்து செல்லும்போது, அடிக்கடி 3 ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டன.
இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். வாகனங்களும் நீண்ட வரிசையில் அணி வகுந்து நிற்பது வழக்கம். இதைக்கருத்தில் கொண்டு, 3 ரெயில்வே தண்டவாளங்களையும் கடந்து செல்லும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ரூ. 87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணி தொடங்கப்பட்டது. மேம்பாலம் கட்டுவதற்காக திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 29 வீடுகளையும், ஊரக பகுதியில் 72 வீடுகளையும் வருவாய்த்துறையினர் கையகப்படுத்தினர்.
95 சதவீத பணிகள் நிறைவு
இந்தநிலையில் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் மட்டும் தனது வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார். இதனால் அவரது வீட்டின் மேல்பகுதியில் மட்டும் சிறிதளவில் பாலம் கட்டும் பணி முடிவடையாமல் இருந்தது.
95 சதவீத பணிகள் நிறைவடைந்த பிறகும், பாலத்தில் போக்குவரத்து தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரத்தில் தற்போது மோட்டார் சைக்கிள்கள், கார், வேன்கள் சென்று வருகின்றன. ஆனால் பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் பாலகிருஷ்ணாபுரம், கோவிந்தராஜ்நகர், ராஜக்காபட்டி, ஏர்போர்ட்நகர், சிலுவத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திண்டுக்கல்லுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவு
இதற்கிடையே முருகவேல் தனது இடத்தை காலி செய்யாமல் இருக்க மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது 2 மகன்கள் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அரசு வேலை வழங்க வேண்டும். தனது குடும்பத்தினர் வசிப்பதற்கு பட்டாவுடன் கூடிய இடம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, முருகவேல் குடும்பத்தினரின் மறுவாழ்வுக்கு தேவையான வசதிகளை அரசு விதிமுறைகளின்படி நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து முருகவேலிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பிறகும் அவர் வீட்டை காலி செய்யவில்லை. இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
போலீசார் குவிப்பு
இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் முருகவேலுவின் வீட்டை இடிப்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன், உதவி கோட்ட பொறியாளர் லட்சுமி, ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன், கிழக்கு தாசில்தார் வில்சன் தேவதாஸ் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று அங்கு வந்தனர்.
இதேபோல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி தலைமையில், திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் குவிக்கப்பட்டனர்.
வீட்டை விட்டு வெளியேற்றம்
இதைத்தொடர்ந்து முருகவேல் மற்றும் அவரது குடும்பத்தினரை வருவாய்த்துறையினர், போலீசார் வீட்டை விட்டு வெளியேற்றினர். மேலும் வீட்டில் இருந்த அவரது உடைமைகள் அகற்றப்பட்டு, பொக்லைன் எந்திரம் மூலம் வீடு இடித்து அகற்றும் பணி தொடங்கியது.
இதற்கு முருகவேல், அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தற்கொலை முயற்சி
அப்போது திண்டுக்கல்லை அடுத்த மாலப்பட்டி பகுதியில், பட்டா நிலம் வழங்கி அங்கு வீடு கட்டி தருவதாக அதிகாரிகள் முருகவேல் குடும்பத்தினரிடம் உறுதி அளித்தனர். இதனை ஏற்க மறுத்த முருகவேல் குடும்பத்தினர், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் பட்டா நிலம் மற்றும் வீடு கட்டி கொடுக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே முருகவேலின் மனைவி பாப்பாத்தி திடீரென சாணிப்பவுடரை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனைக்கண்ட மகளிர் போலீசார், பாப்பாத்தியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீடு இடித்து அகற்றம்
பரபரப்புக்கு மத்தியில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் முருகவேலின் வீடு இடித்து அகற்றப்பட்டது. பாலகிருஷ்ணாபுரம் அருகே உள்ள கோர்ட்டு காலனியில் மகளிர் சுய உதவி குழுவுக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் முருகவேல் குடும்பத்தினர் தற்சமயம் தங்க வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரெயில்வே மேம்பாலத்துக்கு இடையூறாக இருந்த வீடு இடிக்கப்பட்டதால் மீதமுள்ள பணி விரைவில் தொடங்கப்படும் என்றனர்.