இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியபெண் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்
விழுப்புரம் அருகே அரியலூர்திருக்கை ஊராட்சிக்குட்பட்ட டட்நகர் பகுதியை சேர்ந்தவர் அருளாந்து மனைவி அன்னம்மாள் (வயது 70). இவர் தனது கணவர் அருளாந்தின் தந்தை மாணிக்கம், அருளாந்தின் அண்ணன் சவரிமுத்து ஆகிய இருவரின் இறப்பு சான்றிதழ் கேட்டு, அரியலூர்திருக்கை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா (48) என்பவரை அணுகினார். அதற்கு மாணிக்கம், சவரிமுத்து ஆகியோரின் இறப்பு விவரத்தை ஆன்லைனில் பதிவு செய்து வழங்குவதற்காக ரூ.1,000 லஞ்சமாக தர வேண்டும் என அன்னம்மாளிடம் சங்கீதா கறாராக கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் அன்னம்மாள் புகார் செய்ய, போலீசார் கூறிய அறிவுரைப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசாயன பொடி தடவிய பணத்தை எடுத்துக்கொண்டு அரியலூர்திருக்கை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த சங்கீதாவிடம் லஞ்சப்பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது சங்கீதாவை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.