நகராட்சி இடத்தில் இயங்கி வந்த டாக்சி ஸ்டாண்டு அகற்றம்


நகராட்சி இடத்தில் இயங்கி வந்த டாக்சி ஸ்டாண்டு அகற்றம்
x

நகராட்சி இடத்தில் இயங்கி வந்த டாக்சி ஸ்டாண்டு அகற்றம்

திருவாரூர்

திருவாரூர் ரெயில் நிலையம் அருகே நகராட்சி இடத்தில் இயங்கி வந்த டாக்சி ஸ்டாண்டை நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். அப்போது மாற்றும் இடம் வழங்காமல் அப்புறப்படுத்துவதாக ஊழியர்களுடன் உரிமையாளர்கள், டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பு

திருவாரூரில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன விபத்துக்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இதில் திருவாரூர் கடைவீதி, பழைய பஸ் நிலையம் போன்ற முக்கிய பகுதிகளில் எந்த நேரமும் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். கடைகளின் எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பு, தள்ளுவண்டி, தரைக்கடைகள் போன்றவற்றால் வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

திருவாரூர்-தஞ்சை சாலையில் ரெயில் நிலையம் 25 ஆண்டுகளாக டாக்சி ஸ்டாண்டு நகராட்சி இடத்தில் இயங்கி வந்தது. இந்த ஸ்டாண்டில் சுமார் 30-க்கும் மேற்பட்ட டாக்சிகள் நிறுத்தப்படுகின்றன. மேலும் டிரைவா்கள் மற்றும் உரிமையாளர்கள் அதற்கான வரியை ஆண்டு தோறும் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் சாலை விரிவாக்கப்பணிக்காக இந்த இடத்தை காலி செய்து தரும் படி நகராட்சி சார்பில் அறிவுறுத்தபட்டிருந்தது. இதனை எதிர்த்து ஐகோட்டில் தடை ஆணை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வாக்குவாதம்

இந்த வழக்கின் தீா்ப்பில் அந்த இடத்தை காலி செய்யவும், அதற்கு பதில் மாற்று இடத்தை வழங்க நகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் மேலாளர் முத்துகுமார், நகர அமைப்பு ஆய்வர் கணேசரங்கன், பொது பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொக்லின் எந்திரங்கள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் நேற்று டாக்சி ஸ்டாண்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மாற்று இடத்தை வழங்காமல் இடித்ததற்கும், இடிப்பதை தடுத்து நிறுத்த கோரியும் நகராட்சி அதிகாரிகளிடம் டாக்சி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டது.

புதிய பஸ்நிலையம் பகுதியில் இடம் ஒதுக்கீடு

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திருவாரூர்-தஞ்சை சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. தற்போது அனைத்து இடங்களிலும் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த இடம் மட்டும் அப்புறப்படுத்தபடாமல் இருந்தது. நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது. மேலும் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த இடத்தில் இயங்கி வந்த டாக்சி ஸ்டாண்டை அப்புறப்படுத்தினோம். மேலும் இவர்களுக்காக புதிய பஸ்நிலையம் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றனர்.


Next Story