பயன்படாத குடிநீர்த்தொட்டியை அகற்ற வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்
மதுரை திருநகரில் பயன்படாத குடிநீர்த்தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை திருநகரில் பயன்படாத குடிநீர்த்தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடிநீர் தொட்டி
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் 94-வது வார்டு திருநகர் ஓனாக்கல் 1-வது தெருவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் வசதிக்காக 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு குடிநீர்த்தொட்டி கட்டப்பட்டது. அதில் தண்ணீர் ஏற்றப்பட்டு தெரு குழாய்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. அதை முறையாக பராமரிக்கப்படாததால் நாளடைவில் ஆழ்துளை கிணறுகள், மின்மோட்டார் மற்றும் குழாய்கள் சேதமடைந்தது. இதனையடுத்து தண்ணீர் ஏற்றாத நிலையில் குடிநீர்த்தொட்டி காட்சி பொருளாக உருமாறியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த குடிநீர் தொட்டியின் ஒருபுறம் சேதமாகி உள்ளது. இதுதவிர குடிநீர் தொட்டி பக்கவாட்டிலும் செடிகள் வளர்ந்து வருகிறது. குடிநீர் தொட்டியின் மேல்புறத்தில் காங்கிரீட் சிமெண்டு பெயர்ந்து விழுகிறது. இதனால் குடிநீர் தொட்டி எப்போது இடிந்து விழுமோ? என்று அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பயன்படாத தொட்டி
இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் கூறும்போது, குடிநீர் தொட்டி தற்போது பயன்பாட்டில் இல்லை. அதனால் குடிநீர்த்தொட்டியின் மேல்புறம் மற்றும் பக்கவாட்டில் செடிகள் வளர்ந்து நிற்பதால் தொட்டி சேதம் அடைந்துள்ளது. கனமழை மற்றும் சூறாவளி காற்றுக்கு இடிந்து விழுந்து விடும் நிலையில் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே பகுதியை சேர்ந்த உமையாள் பார்வதி: குடிநீர் தொட்டி முழுவதுமாக சேதமடைந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த தொட்டியால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. அதேசமயம் தாழ்வாக தொங்கும் மின் இணைப்பு வயர்களாலும், அந்தரத்தில் நிற்கும் குடிநீர் கட்டிடத்தாலும் உயிருக்கும், உடமைக்கும் பெரும் பாதிப்பு வருமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.