தற்காலிக ஆசிரியர்கள் நியமன தடையை நீக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு
தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடையை நீக்க மறுத்த ஐகோர்ட்டு, தகுதியானவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியது.
தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடையை நீக்க மறுத்த ஐகோர்ட்டு, தகுதியானவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியது.
இடைக்கால தடை
மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்த ஷீலா பிரேம்குமாரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.
எனவே இந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும், அந்த அறிவிப்பை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். அப்போது நீதிபதி, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
கேள்வி எழுப்பிய நீதிபதி
இந்த நிலையில் நேற்று காலையில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு அரசு வக்கீல் ஆஜராகி, தமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை ஐகோர்ட்டு இந்த விவகாரத்தில் இடைக்கால தடை விதித்து உள்ளதால் ஐகோர்ட்டின் வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் தற்காலிக ஆசிரியர் நியமன விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தடையை விலக்கி உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இதனையடுத்து நீதிபதி, எந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
நிரந்தர ஆசிரியர்கள்
அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் மற்றும் தகுதியான ஆசிரியர்கள் தான் நியமிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி, தகுதியானவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கலாமே? தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு என்ன அவசரம் ஏற்பட்டுள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார். பின்னர் இந்த வழக்கு விசாரணை வருகின்ற 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அரசு வக்கீலுக்கு நீதிபதி பதில் அளித்தார்.