'ஆக்கிரமிப்பை அகற்றி அரசு நிலத்தை மீட்க வேண்டும்'
ஆக்கிரமிப்பை அகற்றி அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பூங்கொடி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகைதீன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திலகவதி, கலால் உதவி ஆணையர் ஜெயசித்திரகலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிற மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர். அதன்படி தருமத்துப்பட்டியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், எங்கள் ஊரில் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இது தொடர்பாக கன்னிவாடி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்றனர்.
இலவச வீட்டுமனை பட்டா
இதேபோல் செந்துறை அருகே உள்ள சிறுகுடி, பூசாரிபட்டி கிராமங்களை சேர்ந்த 20 பேர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், நாங்கள் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறோம். சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிக்கிறோம். மேலும் ஒரு வீட்டில் 3 குடும்பங்கள் வசிக்கும் நிலையும் உள்ளது. எனவே நாங்கள் வீடு கட்டி வசிப்பதற்கு அரசு சார்பில் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், என்றனர்.
இதேபோல் அடிப்படை வசதிகள், உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 320 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டார். மேலும் ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை அவர் வழங்கினார்.