கட்சிக்கு உழைத்தவர்களை நீக்குவதா? சசிகலா பரபரப்பு பேச்சு
‘‘கட்சியில் உழைத்தவர்களை இப்போது தொடர்ந்து நீக்கி வருகிறார்கள். இது கட்சிக்கு அழகல்ல.’’ என சசிகலா பரபரப்பாக பேசியுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. பொன்விழா நிறைவு விழா மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்றார். அவரை எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா வரவேற்றார். எம்.ஜி.ஆர். உருவப்படம் - உருவசிலை மற்றும் அவரது மனைவி ஜானகியம்மாள் உருவப்படத்துக்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து ஏழை-எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-
தொண்டர்களுக்கு உரிமை
அ.தி.மு.க.வில் அனைத்து தொண்டர்களுக்கும் உரிமை உண்டு. இந்த கட்சி வாழையடி வாழையாக வளரும். இதை எப்படி, எப்போது, எந்த நேரத்தில் செய்வது என்பது எனக்கு தெரியும். இந்த பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள் நான் பார்த்துகொள்கிறேன். நமது ஆட்சி வந்தால் தான் மக்களுக்கு நல்லது. பயமின்றி சாலையில் நடந்து செல்லலாம். அடாவடித்தனம் எங்கும் இருக்காது. காக்கிச்சட்டை போட்டவர்கள் காலரை தூக்கிவிட்டு வேலை செய்யலாம். இந்த 17 மாத கால ஆட்சியில் மக்கள் எல்லாவற்றையும் உணர்ந்திருக்கிறார்கள்.
மக்கள் ஏக்கம்
கட்சியில் உழைத்தவர்களை இப்போது தொடர்ந்து நீக்கி வருகிறார்கள். இது கட்சிக்கு அழகல்ல. ஜெயலலிதா போல தாயுள்ளம் இருந்தால் தான் அ.தி.மு.க.வை சிறப்பாக நடத்தமுடியும்.
வருகிற நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. முழுமையான வெற்றியை பெறுவதற்கு என்ன செய்யவேண்டுமோ, அதை நிச்சயம் செய்வேன்.
எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடத்திய மக்களாட்சி மீண்டும் வராதா? என மக்கள் எதிர்பார்த்து ஏங்கி தவிக்கிறார்கள். அதனால் தான் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவை நம்பியிருந்த கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன். கரம் கோற்போம். வலிமை பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.