ரூ.16 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தூய சவேரியார் பேராலய திறப்பு விழா- நாளை நடக்கிறது


ரூ.16 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தூய சவேரியார் பேராலய திறப்பு விழா- நாளை நடக்கிறது
x

பாளையங்கோட்டையில் ரூ.16 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தூய சவேரியார் பேராலய திறப்பு விழா நாளை நடக்கிறது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பாளையங்கோட்டை மறைமாவட்டம் 1973-ம் ஆண்டு உருவானது. அப்போது முதல் ஆயராக இருதயராஜ் இருந்தார். அதன்பிறகு ஜூடு பால்ராஜ் ஆயராக நியமிக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு நான் ஆயராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறேன். 22 பங்குகளுடன் தொடங்கப்பட்ட இந்த மறை மாவட்டம் தற்போது 57 பங்குகளுடன் செயல்பட்டு வருகிறது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த மறைமாவட்டத்தின் பேராலயமான பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் கடந்த 1644-ம் ஆண்டு சிறிய ஆலயமாக தொடங்கப்பட்டு 1860-ம் ஆண்டிலும், 1957-ம் ஆண்டிலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது ரூ.16 கோடி மதிப்பில் கலை நயத்துடன் புதுப்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் திறப்பு விழாவும், பாளையங்கோட்டை மறை மாவட்டத்தின் பொன்விழாவும் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ஆலய திறப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. மதுரை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி முன்னிலையில், முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் புதுப்பிக்கப்பட்ட சவேரியார் பேராலயத்தை திறந்து வைக்கிறார். நான் அர்ச்சிப்பு செய்கிறேன்.

9-ந்தேதி (சனிக்கிழமை) மறைமாவட்ட பங்கு தலங்களில் பொன்விழா நன்றி திருப்பலி நடக்கிறது. 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சேவியர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பொன்விழா நிறைவு கொண்டாட்டம் நடக்கிறது. திருத்தந்தையின் இந்திய- நேபாள தூதுவர் பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமை தாங்குகிறார். கர்தினால் அந்தோணி பூலா, பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மதுரை ஆயர் அந்தோணி பாப்புசாமி திருப்பலி நடத்துகிறார். முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் மறையுரை வழங்குகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முதன்மை குரு குழந்தைராஜ் அடிகள், பங்குத்தந்தை அந்தோணி குருஸ் அடிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story