ரூ.3½ லட்சத்தில் 400 மீட்டர் ஓடுதளம் சீரமைப்பு


ரூ.3½ லட்சத்தில் 400 மீட்டர் ஓடுதளம் சீரமைப்பு
x

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ரூ.3½ லட்சத்தில் 400 மீட்டர் ஓடுதளம் சீரமைப்பு பணி தொடங்கியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ரூ.3½ லட்சத்தில் 400 மீட்டர் ஓடுதளம் சீரமைப்பு பணி தொடங்கியது.

பயிற்சி மையம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் "விளையாடு இந்தியா" திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல குமரி மாவட்டத்தில் "விளையாடு இந்தியா" திட்ட நிதி உதவி மூலம் தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான மாவட்டம் மையம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட உள்ளது.

இந்த விளையாட்டு மையத்தில் 100 வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தினசரி தடகள பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சிக்காக மத்திய அரசு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கிடையே அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஓடுதளம் மோசமாக இருந்தது. எனவே ஓடுதளத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஓடுதளம் சீரமைப்பு

இதைத் தொடர்ந்து மத்திய அரசு நிதியில் ரூ.3½ லட்சம் செலவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள 400 மீட்டர் ஓடுதளத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.

இதற்காக டிராக்டர் மூலமாக ஓடுதளத்தில் மண்ணை கிளறிவிட்டு அதில் கிடந்த கற்கள் அகற்றப்பட்டன. இந்த பணிகள் நேற்று தீவிரமாக நடந்தது. அதன் பிறகு ஓடுதளத்துக்கு பயன்படுத்தப்படும் பிரத்யேக மண் போட்டு சமன் செய்யப்படும். பிரத்யேக மண்ணானது நெல்லை மாவட்டத்தில் இருந்து சுமார் 12 லாரிகளில் கொண்டு வரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

விளையாட்டு அதிகாரி

இந்த பணிகளை 2 வாரத்துக்குள் முடிக்க மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். பணிகள் முடியும் வரை நடைபயிற்சி செய்பவர்கள் மைதானத்தின் ஓரமாக செல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story