பல ஆண்டுகளாக பயன்படுத்தாத சுகாதார வளாகம் மீண்டும் புதுப்பிப்பு
கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பயன்படுத்தாத சுகாதார வளாகம் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
வாணாபுரம்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமணம் கிராமத்தில் வடக்குதெரு, தெற்குதெரு, பள்ளிக்கூட தெரு, கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு வீதியில் பல லட்சம் செலவு செய்து சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
ஆனால் கட்டப்பட்டது முதல் அதனை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது சுகாதார வளாகம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அதனை ஒரு நாளும் நாங்கள் பயன்படுத்தியது இல்லை.
மேலும் அதிலிருந்து குழாய்கள் மற்றும் பொருட்கள் சுகாதார வளாகத்தில் இல்லை. இந்த நிலையில் மீண்டும் அதனை ஆயிரக்கணக்கில் செலவு செய்து புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் எந்த ஒரு பயனும் இல்லை. சுகாதார வளாகம் என்ற பெயரில் பல லட்சம் அரசு பணம் விரயம் ஆகிறது.
எனவே ஊராட்சி நிர்வாகம் சுகாதார வளாகத்தை முறையாக பராமரித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதும் மட்டுமல்லாமல் தொடர்ந்து அதனை செயல்படுத்தவேண்டும் என்றனர்.