4 ஆண்டுகளுக்குப் பின்னர் ஊட்டி ரெயில் நிலைய பூங்கா சீரமைப்பு-சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரிக்கை
4 ஆண்டுகளுக்குப் பிறகு ஊட்டி ரெயில் நிலைய பூங்கா மீண்டும் சீரமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே சுற்றுலா பயணிகளை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி
4 ஆண்டுகளுக்குப் பிறகு ஊட்டி ரெயில் நிலைய பூங்கா மீண்டும் சீரமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே சுற்றுலா பயணிகளை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி ரெயில் நிலையம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி ரெயில் நிலையம் 1908-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக ஊட்டி மலை ரெயிலாக அறிவிக்கப்பட்ட பின்னர் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த ரெயிலில் பயணம் செய்தால் இயற்கை சூழ்நிலையை அனுபவித்தபடி 208 வளைவுகள் வழியாக வளைந்து, நெளிந்தபடி, 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறியபடி, 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் அருமையான பயணம் செய்தால் ஊட்டி வரும். இந்த இனிமையான அனுபவத்தை பெற, ஜில்லிடும் குளிரை அனுபவிக்க உலகம் முழுவதும் இருந்து வருகின்றனர். இதனால் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.
புதுப்பொலிவு பெற்ற பூங்கா
இதற்கிடையே ரெயில் நிலையம் தொடங்கிய சில ஆண்டுகளில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ரெயில் நிலையம் முன் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தென்னக ரெயில்வே நிர்வாகம் சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு வந்ததால் பலமுறை மலர் கண்காட்சியை ஒட்டி தோட்டக்கலை துறை சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டு சுழற் கோப்பைகள் வென்றுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டுக்கு பின்னர் பூங்கா பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டது. மேலும் அங்கு ரெயில்வே கேண்டீன் அமைத்து பூங்காவை அகற்ற ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு பாரம்பரிய நீராவி அறக்கட்டளை ரத அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து, தென்னக ரயில்வே நிர்வாகிக்கு மனு அளித்ததால் பூங்காவை அகற்றி கேன்டீன் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஊட்டி ரெயில் நிலைய பூங்கா சீரமைக்கப்பட்டு பொழிவுபடுத்தப்பட்டு உள்ளது. பூங்காவில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு நீரூற்றுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பூங்கா சுவர் மற்றும் ரெயில் நிலைய சுவர் களில் வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள், ஐ லவ் ஊட்டி என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள ரெயில்வே எஞ்சின், பழங்காலத்து டிக்கெட் டேட்டிங் எந்திரம், கடிகாரம் உள்ளிட்ட இடங்களில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். அதே சமயத்தில் பூங்காவுக்குள் அனுமதி மறுக்கப்படுவதால் அவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சுகிறது எனவே சுற்றுலா பயணிகளை பூங்காவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.