சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது


சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது
x

சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது

தஞ்சாவூர்

கல்லணை கால்வாயில் சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது.

கல்லணை கால்வாய்

காவிரி டெல்டா மாவட்டத்தில் கல்லணையில் இருந்து பிரிந்து செல்லும் கல்லணை கால்வாய் பெரும் பங்கு வகிக்கிறது. தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கல்லணை கால்வாய் மூலம் 2 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. கல்லணை கால்வாயின் ஆயக்கட்டு பகுதிகளுக்கு கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் நீரினை முறையாக பயன்படுத்தி தேவையான நேரத்தில் தேவையான அளவிற்கு வழங்குவதற்காக கல்லணை கால்வாய் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல் புனரமைத்தல் திட்டம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டது. திறன்மிக்க நீர் மேலாண்மைக்காக திட்டமிடப்பட்ட திட்டம் ஆசிய உள்கட்ட மைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்த தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.2639 கோடி மதிப்பிலான திட்டத்தை கடந்த 2021-ம் ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி காெணாலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

படுக்கை தளம் அமைத்தல்

நவீனப்படுத்துதல் மற்றும் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் கல்லணை கால்வாயில் இருந்து பெறப்படும் நீர் 62 சதவீத அளவிற்கு பயன்படும் வகையில் உயர்த்தப்பட உள்ளது. திட்டத்தின் கீழ் பல்வேறு மதகுகள், கால்வாய் பாலங்கள் கீழ் குமிழி அமைப்பு, நீரொழுங்கிகள், கல்லணை கால்வாயில் நீரோடும் பாதையில் படுக்கை தளம் அமைத்தல், கால்வாய் கரை பகுதியில் சாய்தளம் கான்கிரீட் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தன.

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டு இதன் மூலம் காவிரி டெல்டாவில் குறுவை, சம்பா தாளடி ஆகிய சாகுபடி பணிகள் நிறைவேற்றப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. மேட்டூர் அணையில் இருந்து கடந்த மே மாதம் 24-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு கடந்த ஜனவரி 28-ந்தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

கரைகளை சமப்படுத்தும் பணி

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் கல்லணை கால்வாயில் நிறுத்தப்பட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கால்வாயில் தரைத்தள பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் நின்று கொண்டிருப்பதால், கல்லணை கால்வாயில் இருகரைகளிலும் சாய் தளம் அமைக்கும் பணிகளுக்காக ராட்சச பொக்லின் எந்திரம் மூலம் கரைகளை சமப்படுத்தும் பணிகளும், அதை அளவீடு மேற்கொள்ளும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. எந்தெந்த இடங்களில் நீரோடும் பாதையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளுக்கு தண்ணீர் முற்றிலுமாக வடிந்து தரை காய்ந்தவுடன் அந்த பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிய வருகிறது.


Related Tags :
Next Story