புதுப்பொலிவு பெறும் தஞ்சை பீரங்கிமேடு


புதுப்பொலிவு பெறும் தஞ்சை பீரங்கிமேடு
x

400 ஆண்டுகளை கடந்த பீரங்கிமேடு ரூ.21¾ லட்சம் மதிப்பில் புதுப்பொலிவு பெற்று வருவதால் வரலாற்று ஆய்வாளர்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

400 ஆண்டுகளை கடந்த பீரங்கிமேடு ரூ.21¾ லட்சம் மதிப்பில் புதுப்பொலிவு பெற்று வருவதால் வரலாற்று ஆய்வாளர்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பீரங்கி

உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியகோவில், ஆசியாவின் பழமையான நூலகம் தஞ்சை சரசுவதிமகால் நூலகம், அரண்மனை, கலைக்கூடம், ஆயுதகோபுரம் போன்ற பெருமைக்குரிய நினைவு சின்னங்கள் நிறைந்த மாநகரமாக தஞ்சை திகழ்கிறது. இந்த வரிசையில் ராஜகோபால பீரங்கியும் ஒன்றாகும்.

இந்த பீரங்கி தஞ்சைக்கு சுற்றுலா வரும் பயணிகள் பார்க்க வேண்டியவற்றில் ஒன்றாகும். பொதுவாக பீரங்கிகள் வார்ப்பிரும்பால் வார்க்கப்படும். ஆனால் இதுவோ தேனிரும்பு பட்டைகளால் இணைப்பு முறையில் உருவாக்கப் பெற்றுள்ளது.

25 அடி உயர மேடை

தஞ்சை அரண்மனையை சுற்றி மன்னர் காலத்தில் பெரியக்கோட்டை இருந்தது. நான்குபுறமும் மதில் சுவரால் எழுப்பப்பட்டிருந்த இந்த பெரியக்கோட்டையின் கிழக்கு பகுதியில் (தஞ்சை கீழவாசல் வெள்ளை பிள்ளையார்கோவில் அருகே) ஏறத்தாழ 25 அடி உயரத்தில் மேடை உள்ளது.

அதில் பெரிய பீரங்கி அமைக்கப்பட்டுள்ளது. பீரங்கி உள்ள இடத்தை பீரங்கி மேடு என்று அழைக்கின்றனர். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இந்த பீரங்கி அமைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அதாவது, கி.பி.1600-1645-ம் ஆண்டுகளில் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கிழக்கு கோட்டை வாசலை பாதுகாப்பதற்காக இந்த பீரங்கி அமைக்கப்பட்டிருக்கலாம்.

டேனீஷ் தொழில்நுட்பம்

ஏறத்தாழ 400 ஆண்டுகளைக் கடந்துள்ள இந்த பீரங்கி எவ்வளவோ மழையையும், வெயிலையும் தாங்கிக் கொண்டு இப்போதும் துரு பிடிக்காத நிலையிலேயே உறுதியாக இருக்கிறது. சுமார் 3 அடி உயரமுள்ள மூன்று தூண்களில் தாங்கி நிற்கும் இந்த பீரங்கியின் நீளம் 26 அடி. ஏறத்தாழ 22 டன்கள் (2,200 கிலோ) எடையுடையது.கியாஸ் வெல்டிங் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இந்த பீரங்கியில் பற்றவைப்பு முறை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மிக அழுத்தமான வெடிமருந்து வெடித்து, குண்டுகளுடன் பீறிட்டு எழும் நெருப்பையும், அழுத்தத்தையும் தாங்கும்படியாக இரும்பு பட்டைகளை இணைத்துள்ள திறன் வியப்புக்குரியது. இந்த பீரங்கி டேனிஷ் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது டேனிஷ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், இங்குள்ள கொல்லர்களைக் கொண்டு தஞ்சையிலேயே தயாரிக்கப்பட்டது.

எதிர்பார்ப்பு

இந்த பீரங்கி இந்திய தொல்லியல்துறை பாதுகாப்பில் உள்ளது. ஆனாலும் இந்த பீரங்கி மேடை முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் பீரங்கி வைக்கப்பட்டுள்ள கட்டிட அமைப்புகள் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் இந்த கட்டிட அமைப்புகளை முறையாக பராமரித்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர்.இந்தநிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பீரங்கி வைக்கப்பட்டுள்ள கட்டிட அமைப்புகளை சீரமைக்க இந்திய தொல்லியல்துறை முடிவு செய்தது. அதன்படி ரூ.21 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பீரங்கி வைக்கப்பட்டுள்ள மேடையின் தரை பகுதியை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கட்டிட சுவர்களை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மகிழ்ச்சி

அதுமட்டுமின்றி இடிந்த சுவர் உள்ள பகுதியில் புதிதாக சுவர் கட்டும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 400 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கும் பீரங்கியை அனைவரும் பார்க்கும் வகையில் பீரங்கி மேடை புதுப்பொலிவு பெற்று வருகிறது. இதனால் வரலாற்று ஆய்வாளர்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story