பூண்டி ஏரியில் சீரமைப்பு பணிகள் தீவிரம்: மழைக்காலத்தில் அதிக நீரை சேமிக்க திட்டம்


பூண்டி ஏரியில் சீரமைப்பு பணிகள் தீவிரம்: மழைக்காலத்தில் அதிக நீரை சேமிக்க திட்டம்
x

பூண்டி ஏரியில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள அணைகளின் மாதிரி ஆய்வுக்கூடங்கள் பூண்டி ஏரியின் வலது மற்றும் இடது கரைகளில் உள்ளன. இந்த ஆய்வு கூடத்திற்கு தேவையான நீர் பூண்டி ஏரியில் திறந்து 2 மதகுகள் மூலம் திறந்து விடப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு பருவமழை காலங்களில் பெய்த மழையால், ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ஏரியின் அருகில் உள்ள மதகுகள் சேதம் அடைந்து ஆய்வுக்கூடத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இந்த மதகுகளை ரூ.10 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணிகள் கடந்த 6 மாதமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் ஏரியின் வலது மற்றும் இடது கரைகளில் உள்ள 2 மதகுகள் மற்றும் கூடுதலாக அவசரகால தேவைக்காக 2 என 4 மதகுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போதைய நிலையில் 2 மதகுகள் முழுமையாக அமைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 2 மதகுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி நடக்கும் இடத்தில் பூண்டி ஏரியின் உட்புறம் சுமார் 20 அடி உயரத்தில் சுற்றுச்சுவர்கள் கட்டி நீரை தடுத்து நிறுத்தி மதகுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

வரத்து கால்வாய் சீரமைப்பு

இதுகுறித்து நீர்வளத்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

பூண்டி ஏரியில் மதகுகள் அமைக்கப்பட்டு வரும் பணிக்கும் நீரை சேமிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியின் உட்புறம் மணலால் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளதால், விபரீதம் ஏற்படாமல் இருப்பதற்காக தற்போது அணையில் முழு அளவு நீர் சேமிக்கப்படவில்லை.

இருந்தாலும் வரத்து கால்வாய்களில் வரும் நீர் ஏரிக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போதைய நிலையில் பூண்டி ஏரியில் 24 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. மதகுகள் அமைக்கும் பணியை விரைந்து முடித்து வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையில் ஏரியில் முழு கொள்ளளவை எட்டும் அளவில் நீரை சேமிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

அதன் அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்குள் மதகுகள் அமைக்கும் பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்பிறகு வடகிழக்கு பருவமழை பெறப்படும் நீர் பூண்டி ஏரியில் முழுமையாக சேமிக்கப்படும்.

கரைகள் பலப்படுத்தும் பணி

கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த மே மாதம் 8-ந்தேதியில் இருந்து ஜூன் 30-ந்தேதி வரை 2.67 டி.எம்.சி. நீர் பெறப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பூண்டி ஏரி சீரமைப்பு பணிக்காக கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

அணைக்கு அருகில் உள்ள கால்வாய் கரைகள் பலப்படுத்தும் பணியில் 60 தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் மூலம் நீர் பெறப்படும் பழுதான கால்வாய்கள் மற்றும் பூண்டி ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் கால்வாய்கள் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர பூண்டியில் இருந்து திறந்து விடப்படும் நீர் வெளியேறும் கால்வாய்களின் கரைகள் பலவீனமாக உள்ளன. இவற்றை சீரமைக்க அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பூண்டியில் அரை டி.எம்.சி.

தற்போதைய நிலையில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 565 மில்லியன் கன அடி அதாவது வெறும் அரை டி.எம்.சி. அளவு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.

அதேபோல், சோழவரம் ஏரியில் 138 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 2 ஆயிரத்து 784 மில்லியன் கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியை எட்டி நிரம்பி உள்ளது. அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 926 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர வீராணம் ஏரியில் 1,319 மில்லியன் கன அடி நீர் நிரம்பி உள்ளது.

62 சதவீதம் இருப்பு

பூண்டி ஏரியில் 17.49 சதவீதமும், சோழவரத்தில் 12.77 சதவீதமும், புழல் ஏரியில் 84.36 சதவீதமும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 100 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 80 சதவீதமும், வீராணம் ஏரியில் 90 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது.

சராசரியாக அனைத்து ஏரிகளிலும் 62.26 சதவீதம் இருப்பு உள்ளது. அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.). தற்போது 8 ஆயிரத்து 232 மில்லியன் கன அடி (8.23 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழையை விட, வடகிழக்கு பருவமழை மூலம்தான் தமிழகம் அதிகம் பயன் அடையும். அந்த வகையில், அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்கும் வடகிழக்கு பருவ மழை மூலம் தமிழகத்திற்கு அதிக நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எனவே அடுத்த ஆண்டு கோடை காலத்திற்கு தேவைப்படும் குடிநீரை அணைகளில் முழுமையாக சேமிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே அணைகள் பராமரிப்பு பணிகளை விரைவாக முடித்து வடகிழக்கு பருவமழையின் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக சேமிக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story