விழுப்புரம்ஸ்ரீ ரேணுகா அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழாதிரளான பக்தர்கள் பங்கேற்பு


விழுப்புரம்ஸ்ரீ ரேணுகா அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழாதிரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:45 PM GMT)

விழுப்புரம் ஸ்ரீரேணுகா அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசையன்று மயானக்கொள்ளை உற்சவம் நடைபெறும். அதேபோன்று, மாவட்டத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை விழா நடைபெறும்.

அதன்படி, விழுப்புரம் நகரில் விழுப்புரம் மீன் மார்க்கெட் அருகில் உள்ள ஸ்ரீ ரேணுகா அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் விநாயகர் பூஜை நடந்தது. பின்னர் அய்யனார் குளத்தில் இருந்து கரகம் எடுத்தலும், இரவு லிங்க பூஜையுடன், புஷ்ப வாகனத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அலகு குத்தி நேர்த்திக்கடன்

தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, பக்தர்கள் பலர் அலகு குத்தியும், எலுமிச்சை மற்றும் தக்காளி பழங்களை உடலில் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், இரவு பூத வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

தொடர்ந்து இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு புஷ்ப அலங்காரத்துடன் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. இதேபோல் விழுப்புரம் நகர மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செஞ்சி

இதேபோல் செஞ்சி நகரம் பீரங்கி மேடு சத்திரத்தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதையொட்டி, நேற்று முன் தினம் மதியம் அம்மனுக்கு பால் அபிஷேகமும் தொடர்ந்து ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் சக்கராபுரம் குளக்கரையிலிருந்து சக்தி கரகம், அக்னி கரகம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

நேற்று காலை மயானக்கொள்ளையை முன்னிட்டு அங்காளம்மன் குறத்தியாக அவதாரம் எடுத்து குறி சொல்லி வரும் நிகழ்ச்சியும், 12 மணிக்கு மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்து அலங்காரம் செய்யப்பட்ட மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்தார். அப்போது, பக்தர்கள் முருகர், விநாயகர், விஷ்ணு, பாவாடைராயன், காளி என பலவித வேடங்களுடன் ஊர்வலம் வந்தனர்.

ஊர்வலம் செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள மயானத்தை அடைந்து அங்கு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வேண்டுதல்கள் நிறைவேற்ற கொழுக்கட்டை மற்றும் தானியங்களை வாரி இறைத்தனர். இரவு 10 மணிக்கு தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பருவத ராஜகுல சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story