சிதம்பரம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா


சிதம்பரம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 6:38 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 14-ந்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் நேற்று கரக திருவிழா நடந்தது. இதில் தில்லை காளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் கரகம் எடுத்தும், அம்மன் வேடங்கள் அணிந்தும், அலகு குத்தியும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

கும்ப படையல்

பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முத்து பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கும்ப படையலும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அம்பேத்கர் நகர், அண்ணா குளம் வடகரை, கீழக்கரை எம்.ஜி.ஆர். நகர், நடராஜர் கார்டன் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story