வி.கொத்தமங்கலம்ரேணுகா பரமேஸ்வரி முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்
வி.கொத்தமங்கலம் ரேணுகா பரமேஸ்வரி முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் அருகே வி.கொத்தமங்கலம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ரேணுகா பரமேஸ்வரி முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 20-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் மாலையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு இரவில் அம்மன் வீதி உலா காட்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில், ரேணுகா பரமேஸ்வரி முத்தாலம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேரானது, வி.கொத்தமங்கலம் கிராமத்தின் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது.
தொடர்ந்து, மதியம் 1.30 மணிக்கு காத்தவராயனுக்கு கழுமரம் ஏறுதலும், மாலை 3 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதலும், 4.30 மணிக்கு முருகனுக்கு காவடி பூஜையும், அம்மனுக்கு செடல் உற்சவமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்தும், காவடி எடுத்தும், செடல் போட்டுக்கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் இரவு 10 மணிக்கு தெருக்கூத்து நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.