பள்ளிகள் மீண்டும் திறப்பு
அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
புதுக்கோட்டை, ஜன.3-
தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடந்தது. அதன்பின் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் விடுமுறை முடிந்த பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறுவதால் அந்த வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் வருகிற 5-ந் தேதி மீண்டும் வகுப்புகள் தொடங்குகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் விடுமுறைக்கு பின் புத்தாண்டில் முதன்முதலாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு மற்றும் பூக்கள் வழங்கியும் அன்போடு வரவேற்றனர். மேலும் மூன்றாம் பருவத்தேர்வுக்கான அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள், பொருட்கள் வழங்கப்பட்டன. பாடப்புத்தகங்களை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வாங்கி படித்தனர்.