பெரியாறு நீட்டிப்பு கால்வாயை மராமத்து செய்ய வேண்டும்
சிங்கம்புணரியில் பெரியாறு நீட்டிப்பு கால்வாயை மராமத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் பெரியாறு நீட்டிப்பு கால்வாயை மராமத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெரியாறு நீட்டிப்பு கால்வாய்
சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராமங்களில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. இதில் அதிகபட்ச விவசாயமாக நிலக்கடலை மற்றும் தென்னை விவசாயங்கள் செய்யப்படுகின்றது. மதுரை மாவட்டம் புலிப்பட்டியிலிருந்து சிங்கம்புணரி வழியாக ஏரியூர் வரை பெரியாறு நீட்டிப்பு கால்வாய் கட்டப்பட்டது. வைகை அணையில் முழு கொள்ளளவு இருக்கும் போது சிங்கம்புணரியில் இருந்து பிரிவு வாய்க்கால் 5, 6, 7 ஆகியவற்றிற்கு தண்ணீர் திறக்கப்பட்டு சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
இதில் வைகை ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் பெரியாறு நீட்டிப்பு கால்வாய் மூலம் கடைக்கோடி கிராமங்களை சென்றடையும் வகையில் கால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் சேமிக்கப்பட்டு விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த பெரியாறு நீட்டிப்பு கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்றி தொடர்ந்து தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மராமத்து செய்ய வேண்டும்
இந்நிலையில் வறட்சி, கால்வாய் சேதம் காரணமாக 12 ஆண்டுகளுக்கு மேலாக கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லை.
இதனால் கால்வாயில் கருவேல மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து கால்வாய் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு உள்ளது. தற்போது பெய்த மழையால் பெரியாறுநீட்டிப்பு கால்வாயில் உபரி நீர் திறக்கப்பட்டு புலிப்பட்டியில் இருந்து சிங்கம்புணரி வழியாக ஏரியூர் செல்ல உள்ள நிலையில் கால்வாயில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டுள்ளதாலும், கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதாலும் கடைக்கோடி வரை தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல பெரியார் நீட்டிப்பு கால்வாய்களின் அந்தந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கால்வாய்களை தூர்வாரவும், மராமத்து பணிகள் செய்திடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.