பேட்டரியில் இயங்கும் குப்பை அள்ளும் வாகனங்கள் பழுது


பேட்டரியில் இயங்கும் குப்பை அள்ளும் வாகனங்கள் பழுது
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் பழுதடைந்துள்ள பேட்டரியில் இயங்கும் குப்பை அள்ளும் வாகனங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் பகுதியில் பழுதடைந்துள்ள பேட்டரியில் இயங்கும் குப்பை அள்ளும் வாகனங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூய்மை இந்தியா திட்டம்

கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து ஊராட்சிகளிலும் கடந்த 2020-ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 5 முதல் 8 எண்ணிக்கை வரையிலான குப்பை ஏற்றி சொல்லும் வாகனங்கள் வழங்கப்பட்டன. மக்கள் தொகை அதிக எண்ணிக்கையில் உள்ள ஊராட்சிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வழங்கப்பட்டன.சுற்றுப்புற சுகாதாரம் மாசுபடாமல் இருப்பதற்காக பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டன.கடந்த 2020-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 2 வருட காலம் மட்டுமே செயல்பட்டு வந்த இந்த வாகனங்கள் தொடர்ந்து பழுதாக ஆரம்பித்தன. இதனால் இந்த வாகனங்கள் அந்தந்த இடங்களிலேயே ஊராட்சிகளின் பல பகுதிகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டன.

பேட்டரியில் இயங்கும் வாகனம்

ஊராட்சி குப்பைகளை ஏற்றி சென்று ஊராட்சியை சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்ள இந்த வாகனங்கள் பெரிதும் பயன்பட்டு வந்தன. ஆனால் தொடர்ந்து இயங்கி வந்த இந்த வாகனங்கள் பழுதாகி விட்டன. இதனால் பேட்டரியில் இயங்கும் இந்த வாகனங்களை இயக்க முடியாமல் போனது. ஊராட்சி குப்பைகளை அப்புறப்படுத்தி எடுத்து செல்லவும் சிரமம் நீடித்து வருகிறது.

இதனால் ஊராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். காரணம் குப்பை ஏற்றி செல்லும் வாகனங்கள் மிகவும் குறைவாக இருப்பதே ஆகும். கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கை உள்ளதாகவும் 15 கிராமங்களை உள்ளடக்கியதாகவும் இருந்து வருவதால் இந்த ஊராட்சிக்கு 8 பேட்டரியில் இயங்கும் குப்பை ஏற்றி செல்லும் வாகனங்கள் வழங்கப்பட்டன.

பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

இதனை தூய்மை பணியாளர்கள் பராமரித்து இதன் மூலம் குப்பையை ஏற்றி சென்று உரிய இடத்தில் கொட்டி வந்தனர். இந்த 8 வாகனங்களும் பழுதடைந்துள்ளன.இதில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகளை காணவில்லை. இந்த வாகனங்களை பழுது நீக்கி மீண்டும் இயக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால் குப்பைகளை எளிதில் அகற்ற முடியும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பழுதடைந்துள்ள பேட்டரி மூலம் இயங்கும் குப்பை அள்ளும் வாகனங்களை உடனடியாக சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story