மீன்பிடி தடைகாலம்:கடலூர் துறைமுகத்தில் படகுகளை பழுதுநீக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்
மீன்பிடி தடைகாலத்தையொட்டி கடலூர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை பழுது நீக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் முதுநகர்,
மீன்பிடி தடைகாலம்
கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம், அக்கரைகோரி,ராசாப்பேட்டை, சொத்திக்குப்பம், சித்திரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த 1000-க்கும் அதிகமான மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலில் இருக்கும். இந்த தடைகாலத்தில் நாட்டுமர படகுகள் மற்றும் சிறிய பைபர் படகுகள் மட்டும் கடலில் 5 நாட்டிகல் மைலுக்குள் சென்று மீன் பிடித்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தடை காரணமாக விசை படகுகள், பைபர் படகுகள் கடலூர் துறைமுகத்தில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
படகுகள் பழுது நீக்கும் பணி
இதற்கிடையே இந்த மீன்பிடி தடைகாலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களின் படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கம் செய்வது, படகுகளில் உள்ள என்ஜின்களை பராமரிப்பது, பழைய வலைகளை சீரமைப்பது, புதிய வலைகளை பின்னுவது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர படகுகளுக்கு புதிதாக வர்ணம் பூசும் பணிகளும் நடைபெற்று வருகிறது.