புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் 'லிப்ட்' பழுது


புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் லிப்ட் பழுது
x

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ‘லிப்ட்’ பழுதால் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் சிக்கியதால் பரபரப்பானது.

புதுக்கோட்டை

கலெக்டர் அலுவலகம்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் 2 'லிப்ட்' வசதிகள் உள்ளது. இதில் முக்கிய பிரமுகர்களுக்கு தனியாக ஒரு லிப்ட்டும், பொதுமக்களுக்கு தனியாக ஒரு லிப்ட்டும் பயன்படுத்தப்படுகிறது. தரைத்தளத்தில் இருந்து 3-வது தளம் வரை இந்த லிப்ட்டுகள் இயங்கும். இந்த லிப்ட்டுகள் அடிக்கடி பழுது ஏற்படுவது உண்டு. ஆட்கள் ஏறிய பின் தளத்தின் எண்ணை அழுத்தினால் சிறிது நேரம் செல்லாமல் இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்ந்த முக்கியமான 10 அம்ச கோரிக்கைகளை மனுவாக கொடுக்க முத்துராஜா எம்.எல்.ஏ. இன்று மாலை கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவருடன் தி.மு.க. நகர செயலாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் முக்கிய பிரமுகர்களுக்கான லிப்ட்டில் ஏறி 2-வது தளத்தில் உள்ள கலெக்டர் அறைக்கு செல்ல முயன்றனர்.

லிப்ட் பழுது

லிப்டில் ஏறிய பின் பொத்தானை அழுத்திய பின்பு கதவுகள் மூடிய நிலையில் நகராமல் இருந்தது. லிப்டில் ஏறியவர்கள் 2-வது தளத்திற்கு வராததை அறிந்த மற்ற நிர்வாகிகள் உடனடியாக படிக்கட்டு வழியாக கீழே இறங்கி சென்று பார்த்தனர். அங்கு 'லிப்ட்' பழுதாகி நின்றதும், அதில் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் சிக்கியதும் தெரிந்தது. இதையடுத்து 'லிப்ட்' கதவின் இடைவெளி வழியாக கம்பியை வைத்து நகர்த்தி கதவை திறந்தனர்.

சுமார் 20 நிமிடத்திற்கு பிறகு அவர்கள் வெளியே வந்து படிக்கட்டு வழியாக நடந்து கலெக்டரின் அறைக்கு சென்று மனு கொடுத்தனர். 'லிப்ட்' பழுதால் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் சிக்கிய சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பானது. மீண்டும் இதுபோல சம்பவம் நடைபெறாமல் தடுக்க உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். சமீபத்தில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 'லிப்ட்' பழுதாகி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story