மழையால் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பு
கூடலூர் நகரில் மழையால் சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கூடலூர்
கூடலூர் நகரில் மழையால் சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சாலைகள் சேதம்
கூடலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் பாலங்கள், சாலைகள் உடைந்து சேதமானது. கூடலூர்- ஊட்டி, மைசூரு தேசிய நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
தொடர்ந்து பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். கூடலூர் நகரில் புதிய பஸ் நிலையம் உள்பட பெரும்பாலான இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் மழை பெய்யும் சமயத்தில் குளம் போல் சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன போக்குவரத்துக்கு மட்டுமின்றி மக்களும் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.
இன்டர்லாக் கற்கள்
இதைத்தொடர்ந்து கூடலூர் நகருக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக உள்ள இடங்களில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு பணி மேற்கொண்டுள்ளனர். மேலும் மழைநீர் தேங்கும் இடங்களில் இன்டர்லாக் கற்களை பதித்து வருகின்றனர். இதனால் மோசமாக காணப்பட்ட சாலை பயன்படுத்த கூடியதாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாராட்டு
இதுகுறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
தொடர் மழையால் கூடலூர் நகர சாலைகள் மிகவும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டது. வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகளை வாகனங்களில் கொண்டு செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. தற்போது நீண்ட கோரிக்கைக்கு பிறகு சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. பல்வேறு கோரிக்கைக்கு பிறகு தீர்வு காணப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.