தமிழ்நாடு முழுவதும் காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்
தமிழ்நாடு முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
வனபாதுகாப்பு தொடர்பான பொதுநல வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு விசாரித்தது. அப்போது, மலைவாசஸ்தலங்களில் கண்ணாடி மதுபாட்டில்களை பொதுமக்கள் வீசிச் செல்வதால் அதை மிதிக்கும் யானை போன்ற வனவிலங்குகள் படுகாயம் அடைந்து பலியாகின்றன.
எனவே, மலைவாசஸ்தலங்களில் மதுவை கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திருப்பிக் கொடுக்கும்போது, அந்த கூடுதல் தொகையை திருப்பிக் கொடுக்கலாம் என்று ஐகோர்ட்டு யோசனை தெரிவித்தது. அதை தமிழ்நாடு அரசும் ஏற்றுக்கொண்டது.
காலி பாட்டில்கள் திட்டம்
அதன்படி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் கடந்த 15-ந் தேதி முதல் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், 'நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 15-ந் தேதி முதல் இதுவரை 18 லட்சத்து 50 ஆயிரம் காலி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுபோல மற்ற மலைவாசஸ்தலங்களில் 59 சதவீத பாட்டில்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளன' என்றார்.
சுற்றுச்சூழல் பாதிப்பு
அதற்கு நீதிபதிகள், 'ஒரு மாவட்டத்தில் மட்டும் இவ்வளவு காலி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றால், தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை ஏன் அமல்படுத்தக் கூடாது? மதுபாட்டில்கள் ஏரிக்கரைகளில் வீசி உடைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதைச் சரிசெய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது' என்று கருத்து தெரிவித்தனர்.
காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாகவும், இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது என்றும் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.
விழிப்புணர்வு
அதையடுத்து நீதிபதிகள், 'இந்த வழக்கை வருகிற ஜூலை 15-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். மதுபாட்டில்களை பொது இடத்தில் வீசிச் செல்லாமல், அதை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக மது அருந்துவோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காக உரிய விளம்பரங்களை வெளியிட வேண்டும். அதுமட்டுமல்ல, தனியார் பார்களிலும் காலி பாட்டில்களை திரும்பப்பெறுவது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பவேண்டும். மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வகுத்து, அதை அமல்படுத்துவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.