தர்மபுரியில் நாளை குடியரசு தின விழா கொண்டாட்டம்-251 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு


தர்மபுரியில் நாளை குடியரசு தின விழா கொண்டாட்டம்-251 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் நாளை (வியாழக்கிழமை) மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. மேலும் 251 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நாளை (வியாழக்கிழமை) தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட உள்ளது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி காலை 8.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரியும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவில் அனைத்து துறை அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

ஒத்திகை

தர்மபுரியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் போலீசாரின் அணிவிப்புக்கான ஒத்திகை தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் போலீசார் தீவிர ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாணவ, மாணவிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

கிராம சபை கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அந்தந்த ஊராட்சிகளில் தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெறும். எனவே இந்த கூட்டங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று கலெக்டர் சாந்தி கேட்டு கொண்டுள்ளார்.


Next Story