சேலம் மாநகரில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்


சேலம் மாநகரில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
x

சேலம் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

சேலம்

சேலம் மாநகராட்சி

சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நாட்டின் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.

இதையடுத்து மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், தூய்மைப்பணியாளர்கள் உள்பட மொத்தம் 34 பணியாளர்களுக்கு மேயர் ராமச்சந்திரன் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தார். குறிப்பாக மாநகராட்சியில் மக்கள் தொடர்பு பணியை சிறப்பாக மேற்கொண்டதை பாராட்டி மக்கள் தொடர்பு இணை இயக்குனர் டி.எஸ்.சுப்பிரமணியத்திற்கு மேயர் ராமச்சந்திரன் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி, மண்டல குழுத்தலைவர்கள் கலையமுதன், உமாராணி, தனசேகர், மாநகர பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந், செயற்பொறியாளர்கள் பழனிசாமி, ராஜேந்திரன் மற்றும் உதவி ஆணையாளர்கள், நிலைக்குழுத்தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் கோர்ட்டு வளாகம்

இதேபோல், சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில், நீதிபதிகள் ராமஜெயம், விவேகானந்தன், தீபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு நடந்த கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற முத்துலட்சுமி, இரண்டாம் பரிசு பெற்ற அபிதாங்கை ஆகியோருக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி பரிசு வழங்கினார். இதேபோல், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

போக்குவரத்துக்கழகம்

சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக சேலம் மண்டல தலைமை அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடந்தது. இதில் நிர்வாக இயக்குனர் பொன்முடி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மேலும், பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு நிர்வாக இயக்குனர் பொன்முடி ரொக்கப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், மண்டல பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள், கோட்ட மேலாளர்கள், உதவி மேலாளர்கள், அனைத்துதுறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தாதகாப்பட்டி உழவர் சந்தை

சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை வளாகத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிர்வாக அலுவலர் மகேந்திரன் தேசிய கொடியேற்றி வைத்து பேசினார்.

தொடர்ந்து காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் சிவகுமார் செய்திருந்தார். இதில் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஊராட்சி அலுவலகம்

சேலம் பழைய நாட்டாண்மை கட்டிடத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரேவதி ராஜசேகரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அங்குள்ள காந்தி சிலைக்கு மலர்தூவி அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு செயலாளர் சேகர், மாவட்ட கவுன்சிலர்கள் அழகிரி, நல்லம்மாள், கீதா குணசேகரன், மல்லிகா, சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராஜசேகரன், மேச்சேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு கலைக்கல்லூரி

இதேபோல், சேலம் அரசு கலைக்கல்லூரியில் நடந்த குடியரசு தினவிழாவில் கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.விழாவில், கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜா, உடற்கல்வி இயக்குனர் மீனாட்சி சுந்தரம், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பிச்சைமுத்து, அன்பழகன், வெங்கட் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story