குடியரசு தின விழா: மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை விமான நிலையம்
குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை விமான நிலையம் மின்னொளியில் ஜொலிக்கிறது. இது விமான பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை விமான நிலையம் மின்னொளியில் ஜொலிக்கிறது. இது விமான பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்னர், விமான சேவை சீராக்கப்பட்டு, அதிக அளவிலான விமானங்களும் மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. இதற்கிடையே வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதியில் இருந்து 24 மணி நேரம் இயங்கும் விமான நிலையமாக மதுரை மாற இருக்கிறது. அதற்கான ஆயத்த பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தநிலையில், நாடு முழுவதும் வருகிற 26-ந்தேதி தேதி குடியரசு தினம், கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக, விமான நிலையத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமான உள் மற்றும் வெளி வளாகங்களில் 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. குறிப்பாக பார்வையாளர்களுக்கு வருகிற 30-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும், நுழைவு வாயில் பகுதியில் வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக சோதனை செய்து, அதன் பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கின்றனர். மோப்ப நாய் பிரிவினரும், விமான நிலைய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்னொளியில்...
விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் இருக்க, குடியரசு தினத்தை முன்னிட்டு விமான நிலையம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுரை விமான நிலையம் மின்னொளியில் ஜொலிக்கிறது. இந்த வண்ண விளக்குகளால் மிளிர்வதை பார்க்கும் பயணிகள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், குடியரசு தினத்தை வரவேற்கும் விதமாக விமான நிலைய பகுதிகள் முழுவதும் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மிக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது விமான பயணிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது என்றனர்.