ஊட்டியில் குடியரசு தின விழா கோலாகலம்
ஊட்டியில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரூ.2½ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
ஊட்டி
ஊட்டியில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரூ.2½ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
குடியரசு தின விழா
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி கலெக்டர் அம்ரித் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உடனிருந்தார்.
இதையடுத்து ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர், இந்திய செஞ்சிலுவை சங்கத்தினர், சாரணர் படையினர் ஆகியோர் பேண்டு வாத்தியம் முழங்க வரிசையாக வந்து அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இதனை கலெக்டர் அம்ரித் ஏற்றுக்கொண்டார்.
பதக்கம், சான்றிதழ்
இதைத்தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்பட 18 பேருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது. முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம், மாவட்ட தொழில் மையம் மூலம் 5 பேருக்கு ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் உள்பட மொத்தம் 59 பேருக்கு ரூ.2 கோடியே ரூ.40 லட்சத்து 50 ஆயிரத்து 663 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
மேலும் மருத்துவ துறையில் சிறப்பாக பணிபுரிந்த அரசு டாக்டர்கள் ரவிசங்கர், குமுதா, தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் இப்ராஹிம் ஷா, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன், ஊட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரேமானந்தன், தீயணைப்பு துறை அலுவலர் அன்பகன் உள்பட 123 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பாரம்பரிய நடனம்
விழாவையொட்டி தோடர், கோத்தர், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ரானா, மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு மோகன் நவாஸ், ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, பூஷ்ணகுமார், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், அரசு மருத்துவக்கல்லூரி டீன் மனோகரி, தோட்டக்கலை துறை இணை இயக்குனர்(பொறுப்பு) ஷிப்லாமேரி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அய்யா சாமி, குழந்தைகள் நல அலுவலர் சோபனா, முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் காந்திராஜன், ஊட்டி போக்குவரத்து கழக அலுவலகத்தில் மண்டல மேலாளர் நடராஜன் தேசிய கொடி ஏற்றி வைத்தனர். மேலும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசு வழங்கினர். ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் முதல்வர் (பொறுப்பு) எபனேசர், ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் டீன் நிர்மலா ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.
கூடலூர்
கூடலூர் ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா தேசிய கொடி ஏற்றினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சித்தராஜ் தேசிய கொடியேற்றினார். அரசு கலை, அறிவியல் கல்லூரியில் துணை முதல்வர் டாக்டர் சண்முகம் தேசிய கொடி ஏற்றினார். நகராட்சி அலுவலகத்தில் நகாட்சி தலைவர் பரிமளா தேசிய கொடி ஏற்றினார். இதில் ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் கீர்த்தனா தேசிய கொடி ஏற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், அண்ணாதுரை கலந்து கொண்டனர். ஸ்ரீ மதுரை ஊராட்சியில் தலைவர் சுனில் தேசிய கொடி ஏற்றினார். கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அய்யப்பன் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் மாநில கலை திருவிழா மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஓவேலியில் பேரூராட்சி தலைவர் சித்ராதேவி தேசிய கொடி ஏற்றினார். பின்னர் 11-வது வார்டு பகுதியான பார்வுட் பஜார் பகுதியில் பகுதி சபை குழு கூட்டம் நடத்தப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி கோர்ட்டில் மாஜிஸ்திரேட் வனிதா, தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் காயத்ரி, போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பான், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மணிகண்டன், அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை அமீலியா, கட்டபெட்டு வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் செல்வகுமார், மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தில் மூத்த உறுப்பினர் ரகுபதி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்.