சேலத்தில் குடியரசு தினவிழா: கலெக்டர் கார்மேகம் தேசிய கொடி ஏற்றினார்-23 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன


சேலத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையொட்டி 23 பயனாளிகளுக்கு ரூ.30.16 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சேலம்

குடியரசு தினவிழா

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் மைதானத்திற்கு காரில் வந்து இறங்கினார். அப்போது அவரை மாநகர் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் வரவேற்று கொடிக்கம்ப மேடைக்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். கலெக்டர் கார்மேகம், திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சேலம் மாவட்ட போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

பாராட்டு சான்றிதழ்

தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு கதர் ஆடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். பின்னர் சமாதானத்தை குறிக்கும் வகையில் வண்ண, வண்ண பலூன்களை மாவட்ட கலெக்டர் கார்மேகம் வானில் பறக்கவிட்டார். வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, கூட்டுறவுத்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 231 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சேலம் மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 117 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, மகளிர் திட்டம் உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 23 பேருக்கு ரூ.30 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பள்ளி கல்வித்துறை சார்பில் சுமார் 2,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

போலீஸ் பாதுகாப்பு

குடியரசு தினவிழாவையொட்டி காந்தி விளையாட்டு மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழக்க செய்யும் கருவிகள் மூலம் போலீசார் மைதானம் முழுவதும் சோதனை நடத்தினர். நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி அமைக்கப்பட்டு மைதானத்திற்கு வந்த அனைவரும் சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலசந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த்வாகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள போர் நினைவு சின்னத்தில் கலெக்டர் கார்மேகம் மலர்வளையம் வைத்து மரியாதை மரியாதை செலுத்தினார். இந்த நினைவு சின்னம், முதலாம் உலகப்போரில் பங்குபெற்ற சேலம் மாவட்ட வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story