திட்ட பணிகளை தொடங்க உத்தரவிட வேண்டும்
உபரிநிதி கொடுத்த ஊராட்சிகளில் உடனடியாக பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கோரிக்கை மனு
சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் தலைவர் மணிகண்டன், செயலாளர் சரவணன், பொருளாளர் முஜீபூர்ரகுமான் ஆகியோர் தலைமையில் ஊராட்சி மன்றதலைவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியை நேரில் சந்தித்தனர். அப்போது அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:- ஊராட்சிகளின் உபரிநிதியில் இருந்து கடந்த 7 மாதத்திற்கு முன்பு திட்ட பணிகள் செய்வதற்காக கொடுக்கப்பட்ட பணத்தில் இருந்து இதுவரை எந்த பணிகளும் செய்யப்படவில்லை. எனவே உடனடியாக பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
பணி உத்தரவு
இதை தொடர்ந்து கலெக்டர் அவர்களிடம், உபரிநிதி கொடுத்த ஊராட்சிகளி்ல் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கினால் உடனடியாக பணி உத்தரவு தரப்படும். அப்படி இல்லாத பட்சத்தில் பள்ளி கட்டிட பராமரிப்பு பணிகள் இருந்தால் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.